4 அரக்கனைச் செற்ற ஆதி

சம்பந்தர் தேவாரத்தில் ஒவ்வொரு எட்டாவது பாடலும் ராவணன் பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளது. இந்தப் பாடல்களின் திரண்ட கருத்தைத் தொகுத்துக் காண்போம்.

இலங்கை தென்திசையில் உள்ளது. அது மூதூர் எனச் சிறப்பிக்கப் படுகிறது. அது உயர்வும் அழகும் பொருந்தியது. அழிபாடிலாத கடலின் அருவரை சூழிலங்கை எனப் போற்றப்படும் அதன் கடற்கரை அழகானது. ஆங்கு இரை தேடிச் சங்குப் பூச்சிகள் உலாவும். தெளிந்த நீர் கொண்ட இக்கடலின் வெண்மையான அலைகள் நிலத்தின் வேர் வரை உலாவுமாறு ஆழ்ந்தவை. அவை கரை மீது ஓசையோடு மோதும். இங்குக் குன்றின் உச்சி மேல் கொடியுடன் கூடிய நீண்ட மதில் சூழ்ந்த நகர் உண்டு. இது மாட வீதிகளால் அழகு பெறுவது. தேசு குன்றாத் தெண்ணீர் கொண்டது, வாசங் கமழும் பொழில் சூழ்ந்தது. நகரில் கொடிகளால் அழகுபடுத்தப்பட்ட தேர்கள் பல உண்டு.

இத்தகைய பெருமை வாய்ந்த இலங்கை நகர்க்கு இறைவன் ராவணன். என்னும் அரக்கன். அவனும் பெருமைகள் பல பொருந்தியவன். அவன் வானகத்தே விளங்கும் மேகங்கள் அளவு உயர்ந்த தோற்றம் உடையவன். இருளையும், மையையும், கடலையும் போன்ற கருநிறமுடையவன், கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் கொண்டவன், நெருப்பு போன்ற சிவந்த சுருண்ட முடி உடையவன், வண்டுகள் அமர்கின்ற பூக்களைத் தலையில் அணிந்தவன், திகழ் வாள் எயிற்றை (ஒளி பொருந்திய பற்களை) உடையவன், வியர்வை தோன்றும் மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன், கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் ￿(வலிமை) பொருந்திய கைகளுடையவன், பெரும் வீரம்கொண்டவன் எண்திசைகளிலும் காவல் காத்து நிற்கும் யானைகளோடு மோதும்போது அவற்றின் கொம்புகள் அவனது மார்பில் செருகி உடைந்தன. அவன் தன் வீரத்தைப் பறை சாற்றும் விதமாக அவற்றைச் சுற்றிப் பூண்கள் அமைத்துக் கொண்டான். முன்னிற்பவர் இல்லா முரண் கொண்ட அவன், குதிரைகளால் இழுக்கப்படும் தேர்ப்படை கொண்டவன், சனம் வெருவுற அஞ்சுமாறு வருபவன், தேவர்களின் சேனை என்ற கடலை வற்றச் செய்யும் செந்தீப் போல போர் செய்யுந் தொழில் மேவுபவன், வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அமர் செய்யும் தொழில் கொண்டவன், வலமிகு வாளன், வேலன், இமையவர் அஞ்சியோட எதிர்வாரவர் தம்மை இல்லாமல் செய்கின்ற வல்லரக்கன், அவனது படை வீரர்களாகிய அரக்கர்கள் மயங்குமாயம் வல்லவர்கள். வானிலும் நீரிலும் இயங்கும் ஆற்றல் கொண்டவர்கள். வில் தானை வல்லரக்கர் விறல் வேந்தன், எரியார்வேற் கடற்றானை இலங்கைக் கோன் என்று போற்றப் படுவதால் அவனுடைய தரைப் படையோடு கப்பற் படையும் வலிமை உள்ளதாக இருந்தது அறியப்படுகிறது. அவன் வண்டு அமரும் கூந்தலை உடைய மண்டோதரியை மனைவியாகப் பெற்றவன்.

இத்தகைய பெருமை பொருந்திய ராவணனின் மறுபக்கத்தைப் பார்ப்போம். அவன் உரைசெய் தொல்வழி செய்தறியாதவன் தொன்மையான அறவுரைகளைச் சிந்தை செய்யாதவன். (சித்தத் தெளிவு அற்ற) உன்மத்தன், போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் தூர்த்தன். இவன் வருத்தம் தரும் தவம் செய்து அயன் அருளால் மிகுந்த வலிமை பெற்றவன். அதனால் செருக்குக் கொண்டான். இறைவனை அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலி. பொருவார் எனக்கு எதிர் யாரெனத் தருக்கி, ஒருவரையும் மேல்வலி கொடேனென எழுந்தான். செருக்கின் காரணமாக, இறைவனிடம் கூட மனம் பொருந்தாது போயினான். இவனது தேர் செல்லும் வழியில் இறைவன் வீற்றிருக்கும் அழகிய கைலாய மலை தடுத்தது. அது இறைவன் நல்லிடம் என்றறியான், பெருவரையின் மேலோர் பெருமானும் உளனோ என வெகுண்டான், வள்ளல் இருந்த மலையதனை வலஞ்செய்தல் வாய்மையென உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தான், வரும் விளைவை எண்ணாதவனாக, வாளமர் வீரத்தை மட்டுமே நினைந்து, இந்த மலை எனக்கு எம்மாத்திரம் என்று கருதி, தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலைமலையைப் பெயர்த்தெடுத்தான்.

ராவணன் மலையை எடுத்த காட்சியைச் சம்பந்தர் வர்ணிப்பதைக் காண்போம். அவன் கர்வம் மிகுந்த தன் உடலை வருத்தி நெருங்கிச் சென்று காலை ஊன்றி இருபது கைகளாலும் வளைத்துப் பிடித்து மலையை வேரொடு பெயர்த்து எடுத்தான், கண்களும் வாயும் ஒளிபரவும் தீ வெளிப்படச் சினங்கொண்டு அதனை நிலைபெயரச் செய்தான். மலை நிலைகுலைந்தது, விண் அதிர்ந்தது, உமை அம்மை அஞ்சி நடுங்கினாள்.

இது கண்ட இறைவன் என்ன செய்தார்? அவருடைய திருவடி செறி கழல் சேர்ந்தது, மலர் போன்றது. அதன் ஒருவிரலைப் பணி கொண்டார் அவர். தன் அழகிய பவழம் போன்ற விரலை ஊன்றி மலையை அழுத்தினார். விரலை ஊன்றக் கூட இல்லை, சரண உகிர் (நகத்தை சற்றே ஒற்றினார். மலை அதனிடத்தில் அமர்ந்தது. நசுக்கப்பட்டான் ராவணன். அவனது முடிகள் சிதறின. தலைகள், வாய்கள், பற்கள், நசுங்கிச் சேறாயின. எழில் தோள்கள் ஆழத்தில் அழுந்தின. தரளக் கடகம் அணிந்த கைகள் முறிந்தன. பத்து வாய்களாலும் கதறினான். ஆஆ என அலறினான். அவனது ஆற்றல், ஆண்மை, புகழ், செருக்கு யாவும் அடங்கின. ராவணனுக்குக் கிடைத்த தண்டனையால் மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழ்ந்தான். ராவணவனது வலிமையால் ஒடுக்கப்பட்டவன் அல்லவா அவன்?

இறைவனது ஊன்றலில் சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்பும் காணப்பட்டன. அடர்த்ததோடு மட்டுமன்றி இன்னருளும் செய்தார் அவர். மலையின் கீழ் நசுங்கிக் கொண்டிருந்த ராவணன் தன் பிழையை உணர்ந்தான். நல் உரைகளால் இயன்ற பாடல்களைப் பாடத் தொடங்கினான். நிமலா போற்றி என்று வேத கீதங்கள் இசைத்தான், கை நரம்புகளையே வீணையாக்கி மீட்டினான், அடி சரணென பணிந்தேத்திப் பாடிய இசை கேட்டு இறைவன் மகிழ்ந்தார், இரங்கினார். சந்திரனின் பெயர் உடைய கூர்மையான வலிமை மிகுந்த வாள் ஈந்தார், முக்கோடி வாழ்நாளும் கொடுத்தார். அன்று முதல் தான் அவன் அழுபவன் என்று பொருள் கொண்ட ராவணன் எனும் பெயரைப் பெற்றான். அவனது பழைய பெயர் என்ன என்றே தெரியாத அளவுக்கு இறைவன் கொடுத்த இந்தப் புதிய பெயர் பரவியது.

சம்பந்தர் இந்தச் செய்தியைப் பதிகம் தோறும் பாட வேண்டிய அவசியம் என்ன? இதனை 353 தடவை வலியுறுத்துவதன் மூலம் அவர் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

சிவபெருமானிடம் முரண் கொண்டவர்கள் பிழைப்பது இல்லை. அவரது கண் பார்வையால் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட காமன் மற்றையோர் காணுமாறு மீண்டும் தன் உரு பெறவில்லை. தக்கன் அழிந்தவன் அழிந்தவன் தான். திரிபுர அவுணர்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். இவரை எதிர்த்து வந்த யானை வடிவ அசுரன், புலி முதலானவை உயிரிழந்து இவருக்கு ஆடையாக மாறிவிட்டன. இவரது கோபத்துக்கு ஆளாகி மீண்டவர் இருவரே. ஒருவன் யமன். அவன் மார்க்கண்டன் என்னும் சிவனடியாரின் உயிரைக் கவர வந்ததால் சிவனால் உதையுண்டான் எனினும் தன் கடமை என்று கருதிச் செய்ததாலும், பணிந்ததாலும் மன்னிக்கப்பட்டான். ராவணன் ஆணவம் கொண்டு சிவனைப் புறக்கணித்தான். ஆயினும் தன் பிழையை உணர்ந்ததால் மன்னிக்கப்பட்டான். எனவே முரண்பட்டாரை அழிப்பதும், பணிந்தாரை, அவர்கள் தவறே செய்திருப்பினும், காப்பதும் இறைவனின் பண்பு என்பதை இது உணர்த்துகிறது. மன்னித்தது மட்டுமல்ல, அவனுக்கு முக்கோடி வாணாளும் கூர்வாளும் கொடுத்து இன்னருளும் செய்தார் இறைவன்.

சங்க காலத்தில் சிவன் காய்கடவுள் என்று அழைக்கப்பட்டார். அவரது கோபத் தோற்றம் தான் முதன்மைப் படுத்தப்பட்டது. இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் வேத மந்திரமாகிய ருத்ரம், ருத்திரனே உன் கோபத்துக்கு நமஸ்காரம் என்று தான் தொடங்குகிறது. இந்நிலையை மாற்றி சிவனது கருணை வடிவை அம்மையார் முதன் முதலில் வெளிப்படுத்தினார். பணிந்து விட்டால் இறைவன் என்ன தான் கொடுக்க மாட்டான் என்று அவர் வியக்கிறார்.

என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து…. அற்புதத் திருவந்தாதி 78

ராவணன் பணிந்ததோடு மட்டுமல்ல, இசையோடு பாடினான். இசைக்கு வயப்படுபவர் மனதில் கொலை முதலிய எண்ணங்கள் தோன்றா என்கிறார் ஷேக்ஸ்பியர். எனவே சிவன் தன்னைப் பகைத்தோரை அழிக்கும் கொலைகாரர் அல்ல. அவரது உண்மையான சொரூபம் கருணையே என்பதனால் சிவனின் தனிப் பெருங் கருணை வடிவை மக்கள் மனதில் பதிய வைக்கவே சம்பந்தர் பதிகம் தோறும் இதை வைத்தார் என்று கொள்ளலாம்.

இதை மற்றொரு கோணத்திலும் காணலாம். ராவணன் ஒரு பிராமணன். ஆம். புலஸ்திய ரிஷியின் மகன் விஸ்ரவசுக்கும் கேகசி என்ற அரக்கிக்கும் பிறந்த அவன் இளம் வயதில் வேதம் கற்றான். பராசரர் என்ற முனிவருக்கும் சத்தியவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்த வியாசர் அந்தணராக ஏற்றுக் கொள்ளப் பட்டது போல ராவணனும் அந்தணனாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இல்லை. ஏனெனில் அவன் அந்தணருக்கு உரிய கடமைகளை விடுத்து அரசர்க்குரிய நடத்தைகளைப் பின்பற்றினான். அதனால் சம்பந்தர் எல்லாப் பாடல்களிலும் அவனை அரக்கன் என்று கூறுகிறாரே அன்றி ஓரிடத்தில் கூட அவனது பிறப்பு பற்றிய விபரம் சொல்லவில்லை. வேதநெறி தழைக்க வந்த சம்பந்தர் இவ்வாறு பிறப்பொழுக்கம் குன்றியவனை எவ்வாறு அந்தணனாக ஏற்றுக் கொள்வார்? அவன் மலையின் கீழ் நசுங்கிய நிலையில், தான் இளமையில் கற்ற வேதத்தை நினைவுபடுத்திக் கொண்டு அதை இசைக்க, இறைவன் மகிழ்ந்தார் என்று கூறிச் சம்பந்தர் வேதியர் வேதம் ஓதுதலின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

எட்டாவது பாடலில் ராவணனையும், ஒன்பதாவது பாடலில் மாலயன் காணாச் சோதி வடிவையும், பத்தாவது பாடலில் சாக்கிய சமணரின் இழிவையும் பாடியதன் மூலம் சம்பந்தர் தன் வாழ்வின் இலட்சியம் என்ன என்பதை விளக்குகிறார்.

அந்தணர் வேதம் ஓதுதலை விடாமற் செய்க, தீ ஓம்புக. ஏனையோர் தீ வடிவமான சிவபெருமானை நீரும் மலரும் கொண்டு வழிபடுக. எப்படியேனும் இறைவன் ஓருவன் உண்டு என்பதை ஓப்புக் கொண்டு அவருக்குப் பணிதல் நம் கடன் என்பதை உணர்க. இறைவன் இல்லை என்று கூறும் சமண சாக்கியரின் தீயுரைகளை விட்டு விலகுக என்பதே சம்பந்தரின் அடிப்படைப் போதனை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு வாசகம் by சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *