11 திருவாசகத்தில் பசு

பக்தி மேலீட்டால் உருகிக் கசிந்த உள்ளத்திலிருந்து பொங்கிப் பீறிட்டு வெளிவந்து கேட்போர் உள்ளத்தையும் உருகிக் கசியவைப்பது திருவாசகம். காரிகை கற்றுக் கவி பாடியவரல்ல மணிவாசகர். ஆனால் அவரது படைப்பில் இலக்கியச் சிறப்புகளும் அடங்கி இருப்பது பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்த இலக்கியச் சிறப்புகளில் ஒன்று உவமைகள் கையாளப்படும் பாங்கு. இவரது உவமைகள் கற்போரது உள்ளத்தில் கருத்தை அழுத்தமாகப் பதிய வைப்பதோடு அழகும் கூட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு காணலாம்.

மாணிக்கவாசகரின் உவமைகளுள் விலங்குகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றுள்ளும் மிக அதிகமாகப் பேசப்படுவது நாய். நன்றி உணர்ச்சிக்காகப் பாராட்டப்பட்டாலும் விலங்குகளில் மிகக் கீழானதாகக் கருதப்படுவது நாய்.

இறைவனை மிக உயர்ந்தவனாகவும், தன்னை மிகத் தாழ்ந்தவனாகவும் கூறிக் கொள்வது பக்தர்களின் இயல்பு. மணிவாசகர் தன்னை மனிதரில் மிகத் தாழ்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதோடு நிற்காமல் நாயேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் இகழ்ந்து கொள்கிறார். நான் என்னும் செருக்கு முற்றிலும் ஒழிந்து விட்ட அவரது மனநிலையை இதிலிருந்து உணரமுடிகிறது.

நாய்க்கு அடுத்தபடியாக, வாதவூரடிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் உவமை-விலங்கு பசுவாகும். தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு! அமைச்சராக இருந்தபோதும், அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அவரது வீட்டில் நிறைய பசுக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவற்றை அவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்பதும் அவரது உவமைகளிலிருந்து தெரிகிறது.

அடிகள் தீட்டும் இந்த சொற்சித்திரத்தைப் பாருங்கள். ஒரு பசு மந்தை. பல பசுக்கள் மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றன. அவற்றில் ஒன்று குருடு. மற்ற பசுக்களோடு அதுவும் நடந்து வருகிறது. வீட்டை நெருங்கியதும் பகல் முழுவதும் கன்றைப் பிரிந்திருந்த பசுக்கள் தத்தம் கன்றைக் கண்டவுடன் பெருங் குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குருட்டுப் பசு தன் கன்றைக் காணமுடியாவிட்டாலும் மற்ற பசுக்கள் மிலைப்பதால் (கத்துவதால்) தானும் அவற்றுடன் சேர்ந்து மிலைக்கிறது.

மெய்யடியார்கள் சிவபெருமானின் பக்தியில் தோய்ந்து ஆனந்தமடைந்து அவன் புகழைப் பாடுகின்றனர். மணிவாசகரோ தனக்கு உண்மையான பக்தி இல்லை என்று கூறிக்கொள்கிறார். (யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்) ஆனால் மற்ற மெய்யடியார்கள் சிவன் புகழ் பாடும்போது, குருட்டுப் பசு மிலைப்பது போல, தானும் பாடுவதாகக் கூறிக்கொள்கிறார்.

ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு
உன் தாளிணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே
மயல் கொண்டு அழுகேனே. (திருச்சதகம் 87)

பக்தி மலையின் உச்சியில் நின்றுகொண்டு அவர் இவ்வாறு தன் அன்பு பொய் என்று கூறிக்கொள்வது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

கடவுளை அடைய நம்முடைய பக்தி உணர்வு எவ்வளவு தீவீரமாக இருக்கவேண்டும் என்பதற்குத் திருவாதவூரார் காட்டும் உதாரணைத்தைப் பாருங்கள். புதிதாகக் கன்று ஈன்ற பசு தன் கன்றைச் சற்று நேரம் காணாவிட்டால் கூடக் கதறித் தீர்த்துவிடுகிறது. மேயச் சென்றால் கூட அதன் நினைவு கன்றிடமே உள்ளது. வயிறு நிரம்பியதும் அது கன்றிடம் திரும்பி வரும் வேகத்தையும் அதனை நக்கிக் கொண்டே பாலூட்டுவிக்கும் பாசத்தையும் பார்த்தவர்களுக்கு, கற்றா (கன்றை ஈன்ற பசு) போலக் கசிந்துருக வேண்டுவனே என்ற அவரது உவமையின் ஆழம் புரியும்.

கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே.
(திருப்புலம்பல் 3)

 

கற்றா மனமெனக் கதறியும் பதறியும்

(போற்றித் திருவகவல் 73)

திருவாசகம் முழுவதும் மணியிடை நூல்போல் ஊடுருவி நிற்பது ஒரே உணர்ச்சி. இறைவனின் பெருமையையும் தன் சிறுமையையும் ஒருங்கே காட்டி, அத்தகைய பெரியோன் இவ்வளவு அற்பனான என்னை ஆண்டுகொண்ட கருணைத்திறம் எவ்வளவு பெரியது என்று வியந்து, அந்தச் சிவானந்தத் தேனை மீண்டும் பருகத் துடிக்கும் ஆவலே அது. மாட்டை உவமையாக்கி மணிவாசகர் அதை விளக்கும் அழகைக் காணுங்கள்.

நோயுற்ற பசுங்கன்று நடக்கமுடியாமல் தடுமாறினால் மாட்டுக்காரர் அதை ஆதரவுடன் தாங்கி, மெதுவாகத் தள்ளிக் கொண்டோ தூக்கிக் கொண்டோ போவர். இத்தகைய கன்றுக்கு நுந்து கன்று என்று பெயர்.

சொந்த முயற்சியால் இறைவனை அடைய முடியாத தான் நுந்து கன்றைப் போல் இருப்பதாகவும் இறைவன் தன்னைத் தேடிவந்து தாங்கிச் சென்றதாகவும் கூறி அந்தக் கருணையை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ.

(திருக்கோத்தும்பி 10)

மாடு சில சமயம் மந்தையிலிருந்து பிரிந்துவிடும். கால் போனவாக்கில் அது வேற்றூர் போய்ச்சேரும். அங்கு அதனைக் கவனிப்பார் இருக்கமாட்டார்கள். அதுவாக, கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் படுத்துறங்கி, தானும் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்க்கும் பயன்படாமல் வறிதே பொழுது போக்கும். இது ஆள்வாரிலி மாடு என்றும் ஊரேறு என்றும் கூறப்படும்.

மெய்யடியார் கூட்டத்தில் சேர்ந்திராமல் பிரிந்து நின்று தன் மனம் போன போக்கில் ஆள்வார் இல்லாத மாடு போலத் தான் வாழ்வதாக மணிவாசகர் கூறுகிறார். இப்படிப்பட்ட தன்னையும் எதிர்பாராத விதத்தில் இறைவன் ஆட்கொண்டதை நினைத்து மகிழ்கிறார்.

…………………………….ஆள்வாரிலி மாடாவேனோ

நெருங்குமடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடு

மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென்றருளாயே

(கோயில் மூத்த திருப்பதிகம் 7)

சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட

ஊரேறாய் இங்கு உழல்வேனோ

(திருச்சதகம் 53)

மாடு தொடர்பான பொருட்களும் திருவாசகத்தில் நிறைய இடம் பெற்றுள்ளன. உவமிக்கமுடியாத சிவானந்தத்திற்கு உவமையாக தேன், கரும்புச்சாறு இவற்றுடன் பாலும் அவரால் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

மாடு வளர்ப்பவர்கள் வீட்டில் தயிர் கடைதல் ஒரு தினசரி வேலை. மணிவாசகர் தயிர் கடையப்படுவதைக் கூர்ந்து கவனிக்கிறார். மத்துக்கும் தாழிக்கும் இடையில் தயிர் தான் என்ன பாடு படுகிறது! புலன்களால் அலைக்கழிக்கப்பட்டுப் பரம்பொருளில் நிலைகொள்ளாமல் தவிக்கும் தன் மனதுக்கு அதை உவமிக்கிறார்.

மானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்

தேனிலாவிய திருவருள் புரிந்தவென் சிவநகர் புகப்போகேன்

(திருச்சதகம் 40)

மத்துறு தண்டயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி

வித்துறுவேனை விடுதிகண்டாய்

(நீத்தல் விண்ணப்பம் 30)

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திட வுடைந்து

தாழியைப் பாவு தயிர்போற் தளர்ந்தேன்

(அடைக்கலப் பத்து 6)

நிறைய மாடு உள்ளவர்கள் நெய்யை ஒரு குடத்தில் சேகரித்து வைத்திருப்பர். அது வீசும் மணத்தால் கவரப்பட்ட எறும்புகள் மெள்ள குடத்தின் மீது ஏறி உள்ளே இறங்கி நெய்யை அடைந்துவிடும். நெய்ப்பசை கால்களை அசையவிடாமற் செய்யவே, அவை திரும்பிச் செல்ல முடியாமல் நெய் மீது மிதக்கத் தொடங்கும்.

மனிதனும் அப்படித்தான். புலன்களுக்கு மகிழ்ச்சி தரும் உலகப் பொருட்கள் பால் நாட்டம் கொண்டு அவற்றை அடைவதிலேயே தன் முயற்சி முழுவதும் செலவிடுகிறான். அந்தப் போகப் பொருட்களை அடைந்த பின் அவனால் மீள முடிவதில்லை. இறைநாட்டம் அவனுக்கு இயலாமற் போகிறது. வாழ்வின் லட்சியம் என்ன என்பதை உணராமல் உரிய கடமைகளைச் செய்யாமல் புலனின்பத்தை மெய்யென்று மயங்கி, செய்யக் கூடாததைச் செய்து அதிலேயே உழலும் நம் போன்றோரின் நிலையைத் தன் மேல் சார்த்தி மணிவாசகர் புலம்புகிறார்.

உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத்துரியாய் புலனின் கட் போதவொட்டா
மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடம் தனை எறும்பெனவே

(நீத்தல் விண்ணப்பம் 24)

பசுவேறும் பரமனையே இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டிருந்த வாதவூரர் பசுவை உவமையாக்கித் தன் பக்தியை வெளிப்படுத்தியுள்ளது நம்மைப் பரவசப்படுத்துகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு வாசகம் by சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *