14

தேவர் குறளும் திருநான் மறை முடிபும்
மூவர் தமிழும் முனி வாக்கும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்றுணர்.

இந்தப் பழம் பாடல் தேவார திருவாசகங்களின் கருத்தும் நான் மறையின் கருத்தும் ஒன்றே என்கிறது.

இதற்கு மாறாக, “வேத நெறிக்கும் சைவ நெறிக்கும் சம்பந்தம் இல்லை, இரண்டும் வேறு வேறானவை” என்ற வாதம் தமிழ் நாட்டில் பரப்பப்பட்டு வருகிறது. அதன் உண்மையை ஆராய்வோம்.

தேவாரத்திலும் திருவாசகத்திலும் பல இடங்களில் இறைவனை வேத ரூபனாகவும் வேதத்திற்கு ஆதியனாகவும் கூறப்பட்டுள்ளது.

வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
வேதம் நான்கும் ஓலமிட் டுணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ ருண்மை இன்மையின்
வேதமெய்ந்நூல் சொன்னவ னே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
வேதமொழியர்வெண்ணீற்றர்செம்மேனியர்
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே

என்று திருவாசகத்தில் பல இடங்களில் வேதத்துக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பு கூறப்பட்டுள்ளது.

1 இத்தனை சான்றுகளையும் தள்ளி விடும் வகையில் “தேவார, திருவாசகங்கள் சொல்லும் வேதம் வேறு, அவை இருக்கு முதலான வடமொழி வேதங்களைக் குறிப்பன அல்ல. அவை தமிழ் மறைகள்” என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். அவர்களுக்காகவே மணிவாசகர், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் என்று இறைவனுடைய அடியார்களில் ஒரு சிலர் இருக்கு வேதம் முதலான தோத்திரங்களைக் கூறிப் போற்றுகிறார்கள் என்றுதெளிவு படுத்துகிறார்.

சங்கரனைச் சந்தோக சாம மோதும் வாயானை
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார் சாம வேதம்
சாமுண்டி சாம வேதங் கூத்தொடும் பாட வைத்தார்
சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை

சங்கரன் சாம வேதி என்று அப்பர் பெருமானும் சிவனுக்கும் சாம வேதத்துக்கும் உள்ள தொடர்பைப் போற்றுகிறார்.

2 “வேதம் உயிர்க் கொலை வேள்வியை அடிப்படையாகக் கொண்டது. சைவம் கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே சைவமும் வேதமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை” என்பது அவர்களது மற்றொரு வாதம்.
மேற்கூறிய இரண்டுமே தவறு. வேதத்தில் உயிர்க் கொலை வேள்வி கூறப்பட்டிருப்பது உண்மை தான். என்றாலும் எல்லா வேள்விகளும் உயிர்க்கொலை கொண்டவை அல்ல. சைவத்திலும் உயிர்க் கொலை இருந்தது.

வேப்பமரத்தில் உறையும் தெய்வத்துக்கு பசுவின் உதிரத்தைப் படைத்ததாக அகநானூறு 309 கூறுகிறது. முருகனுக்கு ஆட்டுக்குட்டியை அறுத்துக் குருதியைத் தினையுடன் கலந்து குறவர் படைத்ததை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடுகிறார்.

இறைவனுக்குப் படைக்கும் உணவு வழிபடுவோரின் உணவுப் பழக்கத்தை ஒட்டியே பல் வேறு காலங்களிலும் பல் வேறு இடங்களிலும் இருந்திருக்கிறது. இன்றைக்கும் சில கோவில்களில் இறைவனுக்கு சுருட்டு, சாராயம் முதலானவை படைக்கும் வழக்கம் உள்ளது.

அந்தணர் உள்பட எல்லா மக்களும் புலால் உண்ட காலம் ஒன்று இருந்தது. புத்த சமண சமயக் கருத்துகள் பரவிய பின்னர் மக்களில் சிலர் புலால் மறுக்கத் தொடங்கினர். தெய்வங்களுக்கும் உயிர்க் கொலை தவிர்த்த படையலை மேற்கொண்டனர். எனவே படைக்கும் உணவின் அடிப்படையில் வேதத்தையும் சைவத்தையும் பிரிக்க முடியாது.

3 “வேதம் வேள்வி மூலம் இறைவனைப் போற்றுவது. சைவம் ஆலய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவது. எனவே இவை இரண்டும் தொடர்பு அற்றவை” என்பது இன்னொரு வாதம்.

வேதம் வேள்வி முறையை மட்டுமே வலியுறுத்தவில்லை. இல்லாமலும் வழிபடலாம் என்று கூறுகிறது. வருங்காலத்தில் ஏற்படக் கூடிய பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளுக்கும் வரவேற்பு தரும் வகையில் வேதம் அமைந்துள்ளது.
மருத்துகள் பக்தர்களின் வழிபாட்டை வேள்வியுடனோ அல்லது பிரார்த்தனைகளுடனோ ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்திரனை வேள்விகளால் மனிதர்கள் அறிவதில்லை. அவர்கள் தோத்திரங்களால் அறிகிறார்கள்.
வேள்வியால் ஏற்படக்கூடிய பலன்களை ரிபு சகோதரர்கள் அருஞ்செயல் மூலமாக அடைந்தார்கள்.
வேள்வியும் செய்து கடுமையாக உழைக்கவும் செய்பவனுக்கு தேவர்கள் அருள் புரிகிறார்கள்.

வணங்கினாலோ, அருஞ்செயல் செய்தாலோ, அல்லது வேள்வி செய்தாலோ அக்னி அவருக்கு வளங்களை அளிக்கிறார்.
பிரார்த்தனை இல்லாத வேள்வி பயனில்லை. வேள்வி இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தரும்.
இந்த வேத மந்திரங்களிலிருந்து வேள்வி மட்டுமே வேத முறை அல்ல என்று அறிகிறோம்.

4 “வேதத்தில் சிவன் என்னும் தெய்வம் குறிக்கப்பெறவில்லை. எனவே வேதத்துக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை” என்று ஒரு வாதம்.

காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் ஒன்றில் கூட சிவன் என்னும் பெயர் குறிக்கப் பெறவில்லை. அதனால் அம்மையாருக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியுமா?

வேதத்தில் இந்திரன், அக்னி, மருத், அசுவினி தேவர்கள் முதலான தேவர்கள் தான் உண்டு. சிவன் இல்லை என்பது உண்மையே. ஆனால் எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாம் ஒரே சத்தியத்தையே குறிக்கும் என்பது வேதக் கருத்து.
உள்ளது ஒன்று, அதை அறிஞர்கள் பல விதமாகக் கூறுகிறார்கள். (ரிக் 1.164.46)

சிவன் என்ற பெயரிலும் விஷ்ணு என்ற பெயரிலும் புதிதாக தெய்வங்கள் ஏற்படுத்தப்பட்ட போது அவை பரம்பொருளை எப்பெயரிட்டும் அழைக்கலாம் என்ற இந்த வேதக் கருத்துக்கு இயைபுடையவையாகவே அமைந்தன. பிற மதத் தெய்வங்களுக்கும், இனி வரவிருக்கும் தெய்வங்களுக்கும் கூட இது பொருந்தும்.

பரம்பொருளுக்குரிய இலக்கணத்தை முதன் முதலில் வரையறுத்தது ரிக் வேதம் தான். ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.

1 கடந்த காலமாகவும் வருங்காலமாகவும் காலம் கடந்து நிற்றல்,

2 விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,

3 சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,

4 புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம்
உலகேழெனத்திசை பத்தெனத்தான்ஒருவனுமே பலவாகிநின்றவா
எங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவில் பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந் துநின்ற தொன்மை
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே

என்று பரம்பொருளின் முதல் பண்பை, அதாவது, இடம் கடந்த தன்மையை விளக்குகிறது திருவாசகம்.

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி
முன்னீறும் ஆதியும் இல்லான்

என்று பரம்பொருளின் காலம் கடந்த தன்மை குறிப்பிடப்படுகிறது.

கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி

என்று அதன் படைப்புத் திறன் வியக்கப்படுகிறது.

இறைவனும் அவனது செயல்களும் நம் சிந்தனைக்கு எட்டாதவை என்பதைக் கீழ்க்கண்டவாறு புகழ்கிறது திருவாசகம்.

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.
விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய்
சிந்தனைக்கும்அரியாய்
நின்னையே அறியேன் நின்னையே அறியும் அறிவறி யேன்
நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையாய்

எல்லாப் பொருளிலும் எல்லாக் காலத்திலும் வியாபித்துள்ள பொருள் ஒன்று தான் இருக்க முடியும். அதை இந்திரன், அக்னி, வருணன் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம் என்பது வேதம் தரும் சுதந்திரம். இதை இன்னும் சற்று நீட்டினால் பரம்பொருளின் பெயர்களில், சிவன், திருமால், விநாயகன், காளி, சாத்தன், வேலன் என்ற பெயர்களும் இருப்பது தெரியவரும். இன்னும் நீட்டுகிறார் பாரதி. அங்கே அல்லா, யெஹோவா என்ற பெயர்களும் தெரிகின்றன.
வேதம் ஒரு சடங்கு நூல் என்று பிரசாரம் செய்யப்பட்டாலும் கூட அது ஒரு பக்தி நூலே. வேதத்தில் பக்தி மாத்திரம் தான் உண்டு என்று பாரதி கூறுவதைக் கவனிக்க.

பக்தி என்பது என்ன? பாரதி வரையறுக்கிறார்- எப்போதும் எப்போதும் எப்போதிலும் எதிலும் எங்கும் நம்மைக் கடவுள் காக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல் பக்தி என்று சொல்லப்படும்.

இறைவனை, என்றும் எங்கும் நம்மைக் காப்பவராக, தனக்கு மிக நெருங்கியவராக- தாயாக, தந்தையாக, நண்பனாக, குழந்தையாகக்- கருதுவது, அவனையே சரணடைவது, அவன் புகழைக் கூறுவது, அவனிடம் தன் குறைகளைத் தெரிவித்து நீக்குமாறு வேண்டுவது, அவனன்றி வேறு ஒருவரையும் நாடாமல் இருப்பது – இது தான் பக்தியின் அடையாளங்கள்.

கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே,

கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா

என்ற மாணிக்க வாசகர் கூற்றின் ஆழ்ந்த பக்தியை இந்திரா, நாங்கள் உன்னை மடி நிரம்பிக் கன்றை அழைக்கும் பசுப் போலக் கதறி அழைக்கிறோம். எங்கள் பிரார்த்தனையைச் செவி மடுப்பாயாக என்ற ரிக் 7.32.22 இல் காணலாம்.

அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொல்வது உன்னைத் துதிக்க வலிமையும் நீயே தான் கொடுக்க வேண்டும் என்ற வேதக் கூற்றின் எதிரொலியே 5.10.7

நீ எங்களுடையவன், நாங்கள் உன்னுடையவர்கள் என்ற ரிக் 8.92.32 உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று திருவாசகத்தில் வெளிப்படுகிறது.

தந்தையின் ஆடை முனையைப் பிடித்திழுக்கும் மகனைப் போல நான் உன்னை என் பிரார்த்தனையால் பிடித்திழுக்கிறேன் (ரிக் 3.53.2) என்பது சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே என்று மாணிக்க வாசகர் கூறுவதற்கு முன்னோடி.

தெய்வத்தைத் தந்தையாக, உறவினனாக, நண்பனாகப் பாவித்துப் போற்றும் மந்திரங்கள் வேதத்தில் பல உள்ளன. இதோ ஒன்று. மருத்துகளே, தந்தை மகனை அணைத்துக் கொள்வது போல, நீங்கள் என்னை எப்பொழுது இருகைகளாலும் அணைத்துக் கொள்வீர்கள்? (ரிக் 1.38.1)

சூரனே, நீ எங்களை ஒரு குற்றத்துக்காகக் கொல்லாதே, இரு குற்றங்களுக்காகக் கொல்லாதே, மூன்று குற்றங்களுக்காகக் கொல்லாதே, பல குற்றங்களுக்காகக் கொல்லாதே

என்ற மந்திரம் 8.45.34

சிறியேன் பிழை பொறுக்குங் கோனே

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின்
வெற்றடியேனை விடுதிகண்டாய் விடிலோ கெடுவேன்
பேயேனதுள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை
உமையாள் கணவா எனை ஆள்வாய் பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ

என்ற திருவாசக வரிகளில் தொனிக்கிறது.

உன்னையன்றி எனக்கு சுகப்படுத்துபவன் எவரும் இல்லை

என்ற ரிக்8.66.1 இன் ஒரு முனைப்பட்ட பக்தி

பரி மேற் கொண்ட சேவகனார் ஒருவரையன்றி உருவறியாதென்றன் உள்ளமதே

என்ற திருவாசகத்தில் காணப்படுகிறது.

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் என்று மணிவாசகர் கூறியதின் முன்னோடி ரிக் 1.7.7 இல் காணப்படுகிறது. இந்திரனைப் புகழும் வகையை நான் அறியேன் என்கிறார் ரிஷி.

புகழுள்ள உன் நாமத்தை நான் எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பேன் என்று வேதம் 7.22.5 கூறுவதற்கிணங்க திருவாசகமும்

கொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப் பாடி
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ
உன்நாமங்கள்பேசுவார்க் கிணக்கிலாததோர்இன்பமேவரும்

என்று நாம ஜப மஹிமை பற்றிப் பேசுகிறது.

திருமறையும் திருவாசகமும் ஒருவாசகம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு வாசகம் Copyright © 2015 by சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book