7

பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த வாதவூரடிகள் அராபிய வணிகரிடம் குதிரை வாங்கக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கு சிவபெருமான் குருந்த மரத்தடியில் குரு வடிவாக எழுந்தருளி இவருக்கு உபதேசம் செய்தார். வந்த வேலையை மறந்து இறைவனுக்கு ஆலயம் எழுப்புவதில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள் முழுவதையும் செலவிட்டார். அரசனிடமிருந்து அழைப்பு வந்ததும், சிவனிடம் முறையிட, பெருமானும் நரிகளைப் பரியாக்கிக் குதிரைச் சேவகனாக வந்து பாண்டியனிடம் ஒப்புவித்துச் சென்றார். இரவில் அக்குதிரைகள் மீண்டும் நரியாயின. அது கண்டு சினந்த அரசன் மணிவாசகரைச் சிறையிலிட்டான். பின் இறைவன் மணிவாசகரின் பெருமையை அரசனும் பிறரும் உணருமாறு, வைகையில் வெள்ளம் தோற்றுவித்துத் திருவிளையாடல் புரிந்தார்.

இந்த நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மணிவாசகர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் இதற்கு அவரது திருவாசகத்தில் அகச்சான்று உள்ளதா? ஆராய்வோம்.

திருவாசகத்தில் 3 இடங்களில் நரியைப் பரியாக்கிய விபரம் கூறப்பட்டுள்ளது.

கீர்த்த்தித் திருவகவல் 36வது வரியில் – “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்.”

திருவேசறவு 1-“நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே.”

ஆனந்தமாலை 7- “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்தாய்.”

இது தவிர 9 இடங்களில் சிவன் குதிரைச் சேவகனாக வந்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த 12 இடங்களில் எதிலும், இந்தத் திருவிளையாடல் தனக்காகச் செய்யப்பட்டதாகவோ தன் வாழ் நாளில் நடைபெற்றதாகவோ மணிவாசகர் குறிப்பிடவில்லை.

தன்னடக்கத்தின் காரணமாக, மணிவாசகர் தன்னைப் பற்றிக் கூறாமல் இறைவனின் திருவிளையாடலை மட்டும் குறிப்பிடுகிறார் என்ற வாதம் பொருந்தாது. ஏனெனில், மணிவாசகர் பல இடங்களில் இறைவன் தனக்காகச் செய்த பெருங் கருணை பற்றிப் பலவாறாகப் புகழ்கிறார். என் குற்றங்களைப் பொருட்படுத்தாது ஆண்டு கொண்டாயே, இறைவா உன் கருணைத்திறத்தை நான் எப்படி இயம்புவேன் என்று விம்முகிறார். என்னைத் தில்லைக்கு வா என்று பணித்து என்னை உன் அடியவருடன் கூட்டிவைத்தவன் அல்லவா நீ என்று போற்றுகிறார்.

.

நாயினேனை நலமலி தில்லையுட்
கோலமார்தரு பொதுவினில் வருகென
ஏல என்னை ஈங்கொழித்தருளி
அன்றுடன் சென்ற அருள் பெறும் அடியவர்
ஒன்றவொன்ற உடன்கலந்தருளி……… கீர்த்தித் திருவகவல் 127- 131

எந்தத் திருவிளையாடலையும் இன்னாருக்காகச் செய்யப்பட்டது என்று கூறும் வழக்கம் இல்லாதவர் மணிவாசகர் என்ற கூற்றும் பொருந்தாது. ஏனெனில், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியைக் கூறும்போது, ‘அடியவட்காகப் பாங்காய் மண் சுமந்து’ என்று பிட்டு வாணிச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கீர்த்தித் திருவகவல் 15

பாண்டிய மன்னனுக்காகக் குதிரைச் சேவகனாக இறைவன் வந்ததைத் திருப்பாண்டிப் பதிகத்தில் 6 இடங்களில் குறிப்பிட்டு ‘மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடும்’ பாண்டிப்பிரான் என்று இறைவனைப் போற்றும் அவர் எந்த இடத்திலும் தனக்காக இறைவன் குதிரை மேல் வந்ததாகக் கூறவில்லை.

அதிசயப்பத்து என்ற பகுதியில் அவர் குறிப்பிடும் அதிசயம், மானிடரில் கடையனான தன்னை இறைவன் ஆண்டுகொண்டது தான்.

மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படுகின்றேனை

அண்ணல் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே.

மேலும் அவர் இறைவனின் மிகப் பெரிய அதிசயச் செயலாக வியந்து பாராட்டுவது கல்லைப் பிசைந்து கனியாக்கிய விந்தையைத் தான். ஆம். கல் போன்ற தன் மனத்தை நெகிழ வைத்து ‘மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து, கை தலை மேல் வைத்து கண்ணீர் ததும்பி உள்ளம் வெதும்பி’ இறைவனைப் போற்றும் நெறியில் ஆற்றுப்படுத்திய செயல் தான் மிகப் பெரிய அதிசயம்.

கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு
என்னை நின் கழற்கன்பன் ஆக்கினாய் – திருச்சதகம் 94

 

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியனை
தில்லை நகர் புக்குச் சிற்றம்பல மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய் – திருவம்மானை 5

 

இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வர்ணிப்பது போல, எங்கோ எப்போதோ நடந்தது என்ற முறையில் தான் அவர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகிறாரே அன்றித் தன் வாழ்வில் அது நடந்ததாகக் குறிப்பிடாத நிலையில் இந்தக் கதை எப்படியோ மணிவாசகர் வரலாற்றுடன் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நரியைப் பரி ஆக்கிய திருவிளையாடல் மணிவாசகர் காலத்துக்கு முன்பே நடந்தது என்பதற்கு வலுவான சான்று, மணிவாசகருக்குக் காலத்தால் முற்பட்ட திருநாவுக்கரசரும் இறைவன் நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது தான்.

அப்பரின் திருவீழிமிழலைப் பதிகத்தில் இறைவன் இடுகாட்டு நரியைப் பரியாகக் கொண்டு மகிழ்வதாகக் கூறுகிறார்.

எரியினார் இறையார் இடுகாட்டிடை
நரியினாற் பரியா மகிழ்கின்றதோர்
பெரியனார் தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழு வீழி மிழலையே

 

திருவாரூர்ப் பதிகத்தில் மேலும் தெளிவாக இறைவன் நரியைக் குதிரை செய்பவன் என்றே கூறுகிறார்.

 

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங்கொண்டாடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசதிர்ந்தானை முன்னோட முன்பணிந்தமரர்கள் ஏத்த
அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூரமர்ந்த அம்மானே

 

இதில் இறைவன் எல்லாம் வல்லவன் என்பதற்குச் சான்றாக சில எடுத்துக்காட்டுகள் தருகிறாரே தவிர இந்த நிகழ்ச்சி நடந்ததாக அவர் குறிப்பிடவில்லை.

மறைமலை அடிகள் கூறுவது போல மணிவாசகர் திருநாவுக்கரசருக்குக் காலத்தால் முந்தியவர் என்பதை ஏற்றுக் கொண்டாலும் பிரச்சினை தீரவில்லை. தன் காலத்திலும் முற்காலத்திலும் இருந்த பல அடியார்களைக் குறிப்பிடும் அப்பர் பெருமான் மணிவாசகர் பற்றியோ அவர் பொருட்டு நரி பரியாக்கப்பட்டதையோ குறிப்பிடாதததும் சிக்கலைத் தருகிறது. அப்பர் மட்டுமல்ல பிற தேவார ஆசிரியர்களும் மணிவாசகர் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

எனவே நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சி மணிவாசகர் காலத்தில் நடந்தது அல்ல, இது இறைவனின் எல்லாம் வல்ல தன்மையை விளக்க வந்த ஒரு கூற்று என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு வாசகம் Copyright © 2015 by சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book